பழைய டைரியை
புரட்டி பார்க்கிறேன் ...
பதினான்கு வருடமாகிறது
நானும் நீயும் சந்தித்து
உனக்கு பின்
மொழி தெரியாத புரியாத
படித்த ... நவ நாகரிக
ஏழை பணக்கார என
எத்தனையோ பெண்கள் என்னை
கடந்தார்கள் ...
ஏனோ மனம்
உன்னை மட்டும் திரும்ப திரும்ப
நினைத்து கொள்கிறது ...
அன்று வகுப்பில்
பக்கத்து பக்கத்து சீட்
இல்லை என்றாலும்
திரும்பினால் பார்வை படுபடியாய்
நாம் உட்காருவோம் ...
தடங்கலாய்
யாரேனும் இடையே அமர்ந்தால்
நானும் நீயும் தவிப்பது
நமக்கு மட்டும் தான் தெரியும் ...
கூடி கூடி நாம் பேசியதில்லை
கொஞ்சி பேசி சிரித்தது இல்லை
அனாலும்
கொஞ்சி பேசி சிரித்த சந்தோசம் ...
இன கவர்ச்சி வரும்
அளவுக்கு
நீயும் நானும் பெரிய அழகல்ல ...
உடம்பு சரியில்லை என நீ
விடுப்பு எடுத்தால் என்னை
சங்கடப்படுத்தும் என
சாமர்த்தியமாய் என்னைப்போல்
நீயும் சமாளிப்பாய்...
வகுப்பில் ஏதேனும்
விடை தெரியாமல் நான் முழித்தால்
குறுக்கே நீ ஒரு கேள்வி கேட்டு
ஆசிரியரை குழம்பச் செய்வாய்...
மேடை ஏறுவதையே தவிர்பேன்
எனக்காக பெயர் கொடுத்து வீடுவாய்
உனக்காக மேடை ஏறுவேன் - அங்கு
கூ ட்டமே எனக்கு நீயாய் தெரியும் ...
எழுதிய கவிதைக்கு எல்லோரும்
கடமையாய் கை தட்ட
நீ மட்டும்
எனக்காய் சத்தமாய் கைதட்டுவாய்...
உன்னை கடக்கையில்
ஓரமாய் ஒரு
கண்ணும் வெட்டுவாய்...
விடுமுறை நாள்கள்
எல்லோர்க்கும் விழா நாள்கள்
நமக்கு மட்டும் விளங்காத நாள்கள்
ஏதோ காரணம் சொல்லி
எங்கள் தெருவை
பல முறை கடப்பாய்...
தவறுதலாய் கதவு மூடி இருந்தால்
தைரியமாய் உள்ளே வந்து
ப்ராடிகால் நோட் கேட்பாய்...
எழுதி கொடுப்பதே நீ என
யாருக்கு தெரியும் ....
ஆன்டி என அடுக்களையில் நுழைந்து
அம்மா வுடன் ஏதேதோ பேசி
எனக்கு பிடித்ததை சமைப்பாய்
நீ போனவுடன் அம்மா
உன்னை புகழ்வார்கள்
நான் வெட்கத்தால் தலைகுனிவேன் ...
எறால் பிரியாணி செய்யும் போது
அம்மா உன் பெயரை
இன்னும் ஞாபக படுத்துவார்கள் ...
நாம்
காதலித்தோமா ...
கடைசி வரை நமக்கு தெரியாது ...
பழகினோம் ..
வருடங்கள் போனது தெரியவில்லை .,.
கடைசியாய் நாம் சந்திக்கும்
பத்து நாட்கள் ...
எல்லோரும் கனத்த இதயத்துடன்
கை குலுக்குகிறோம் ...
ஆட்டோ கிராப் போடுகிறோம்
எல்லோர்க்கும்
ஏதேதோ எழுதி கொடுக்கிறேன் ...
நீயும் என்னை கடந்து சென்று
எல்லோரிடமும் வாங்குகிறாய் ...
நானும் உன்னை கடந்து சென்று
எல்லோரிடமும் வாங்குகிறேன் ...
ஏனோ நமக்குள் வாங்கி கொள்ள
இருவருக்கும் தோணவில்லை ...
உன் நினைவாக
இன்னும் அந்த பக்கம் மட்டும்
வெண்மையாய் எழுதப்படாமல்
இருக்கிறது .....
எனக்கு தெரியும்
உன்னிடம் அதே போல் ஒரு பக்கம்
வெண்மையாய் எழுதப்படாமல்
இருக்கும் ...
எழுதி திர்த்து விட முடியுமா
நம் புரிதலை ...
காலங்கள்
காயத்தையும் காதலையும்
ஆற்றும் என்பார்கள் ...
காலங்களால் என்னை
கடந்தவர்கள் எல்லாம்
உன்னில் பாதியும் இல்லை
ஆதலால்
என்னுள் இன்னும் -மீதமாய்
இல்லை
மொத்தமாய் நீயே இருக்கிறாய் ....
சாப்பாட்டுக்கடை - மெட்ராஸ் பாயா ஹவுஸ்.
3 months ago
3 comments:
hi,
yaaru antha ponnu
athu enna eral briyani?........
romba feelinga irukkam!!
Post a Comment